Wednesday, December 8, 2010

விளம்பரங்களின் தாக்கம்

இன்றைய இளம்தலைமுறையினரை விளம்பரங்கள் வெகுவாக பாதிக்கின்றன. அவைகளின் நோக்கம் வியாபார நோக்கத்திற்காக இருந்தாலும் பல்லாயிரக்கணக்கானோர் பார்க்கும் ஊடகத்தில் அவை சங்கடங்களையே தோற்றுவிக்கின்றன. அதுவும் சின்னஞ்சிறு பிஞ்சுகளின் மனதில் நஞ்சை எற்றுவதாகவே உள்ளன. சில உதாரணங்கள் கீழே:

உதாரணம் 1 :

 Clinic Plus ஷாம்பூ விளம்பரம். அதில் தாயும் குழந்தையும் கடைக்கு செல்வார்கள். அங்கு ஒரு பெண்ணின் நீள தலை  முடியைப் பார்த்து அக்குழந்தை வியக்கும். அப்பெண் திரும்புவாள், பார்த்தால் அப்பெண் குழந்தையின் கணித ஆசிரியையாய் இருக்கும்.ஆசிரியை சிறு பெண்ணிடம் கேட்பாள் "3 ஐ 3 ஆல் பெருக்கினால் எவ்வளவு? ' என்று.
குழந்தையும் 9 எனக் கூறும். ஆனால் ஆசிரியை சொல்லுவார் 3 என. எப்படி என்றால் 3 வாரம் ,வாரம் 3 முறை அந்த ஷாம்பூ போட்டால் 3 செ.மீ முடி வளரும் எனவும் விளக்கம் அளிப்பார்.

உதாரணம்  2 :

 "Close Up " விளம்பரம்.இதில் ஜோடிகள் இவள் முத்தம் பரிமாறிக் கொள்வார்கள் இந்த பேஸ்ட் யூஸ்  பண்ணிய பிறகு புத்துணர்ச்சியாக இருக்குமாம். இது போல எனக்கு தெரிந்து 4 வேறுபட்ட ஆனால் இதே கருத்தை மையமாய் கொண்டு இதே பேஸ்ட் விளம்பரம் வருகிறது.

உதாரணம்  3 :

"Insurance Company " விளம்பரம். இரயில் பயணம் போன்று துவங்கும். வாலிபன் side lower berth இருக்கையில் அமர்ந்திருப்பான் . சிறுவன் ஒருவன் lower berth இருக்கையில் இருப்பான். வாலிபன் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டே சிறுவனிடம் நீட்டுவான், சிறுவனுக்கு பாக்கெட் முழுவதும் கொடுப்பான். பிறகு பொம்மை ஒன்று வரும்.அதையும் வாங்கி சிறுவனுக்கே கொடுப்பான். பிறகு சன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு அவனைக் கூப்பிட்டு உட்கார வைப்பான்.  இவன் சிறுவனின் இடத்தில் உட்காருவான்.  இது வரையில் பரவாயில்லே எனத் தோன்றும். அடுத்த சீனில் அவன் பக்கத்தில் ஒரு டீன் ஏஜ் பெண் அமர்ந்திருப்பாள். ஒரு வாய்ஸ் வரும் "நீங்கள் சிறுக சிறுக இன்வெஸ்ட் செய்தால் பெரிய லாபம் கிடைக்கும்"  என்று.
            
  எங்கே போய் முட்டிக்கொள்வது. இவ்வாறெல்லாம் விளம்பரம் எடுத்து வியாபாரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இருப்பவர்களை  என் செய்வது. இவர்களின் வியாபாரத்திற்காக மக்கள் நலனை கிடப்பில் போட்டு விடுகிறார்கள். சினிமா படங்களுக்கு சென்சார்  போல விளம்பரங்களுக்கும் சென்சார் வந்தால் தான் நன்றாக இருக்கும்.

Thursday, November 25, 2010

மனித தெய்வங்கள்

நகரத்தில் பிறந்து
அடுக்குமாடிக் குடியிருப்பில் வளர்ந்து
செடி, கொடிகள் மற்றும் பறவைகளைக் கூட
புத்தகத்தில் மட்டுமே பார்த்து
உதவிக்குக் கூட அண்டை வீட்டுக்
கதவுகள் மூடியபடி  இருந்து
பணியிடத்திலும் கூட மனம் விட்டு
பேச முடியாமல் வாழ்ந்து
அலுத்து போன நண்பிக்கு
ஓட்டு வீடுகளாய் எளிமையாய் இருந்தாலும்
இயற்கையோடு இணைந்து
அண்டை அயலாருக்கு உதவி செய்து
நாட்டு மக்களின் உணவுத் தேவையை
பூர்த்தி செய்யும் கிராம மக்கள்
மாறுபட்ட மனித தெய்வங்களாய் தெரிந்தனர்! ! !

Friday, October 22, 2010

முட்டுக்கட்டை

நண்பனொருவன் சொன்னான் இலவச
பயிற்சி வகுப்பு எடுப்போம்
இயலாத பள்ளி மாணவர்களுக்கு என்று..
நாங்களும் எங்கள் பகுதியில் ஆரம்பித்தோம்
முதல் நாள் வந்தார்கள் வெட்டி வேலை என்றார்கள்
அடுத்த நாள் இதெல்லாம் ஆகற வேலையா என்றார்கள்
விடுமுறை நாட்களில் திறன் அறியும்
போட்டிகளில் வென்றவர்க்கு
பரிசு கொடுத்தால் மத பிரச்சாரமா
என்றன  மத அமைப்புகள்
இலவச நோட்டு புத்தகம் கொடுத்தால்
கட்சியில் ஆள் சேர்கிறீர்களா
என்றனர்  கட்சி அமைப்பினர்
எங்களையும் அவர்களைப் போல எண்ணி
எங்கள்  முயற்சிக்கு கைகொடுக்காவிட்டாலும்
முட்டுக்கட்டை போடாமல் இருக்கலாமே 

Thursday, October 14, 2010

சர்வதேச கண்பார்வை தினம்

அக்டோபர் மாதம் 2 -வது வியாழக்கிழமை சர்வதேச கண்பார்வை தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் நாம் அனைவரும் ஒரு வாக்குறுதி எடுப்போம்  கண்பார்வை குறைபாடற்ற சமுதாயம் உருவாகப் பாடுபடுவோம் என்று.

பட்ட மரத்தின் வேதனை

வறட்சி காலத்தில் ஊர்க்கோடியில்
இலைகளற்ற நிலையில் இருக்கும் எனக்கு
என் வாழ்வுக்கு ஆதாரமாம் மழைக்கு
காரணமான என் சக தோழர்களை
அழித்து என்னை தனி( பட்ட) மரமாக்கிய
நீங்களே அவ்வாறு அழைப்பதைக் கேட்கும்
வேதனையை விட நானும்
அவர்களுடன் வெட்டுப்பட்டு
மடிந்திருக்கலாமே ! ! !

Wednesday, October 13, 2010

அரசுப்பேருந்து

கால் கடுக்க ஒரு மணித்துளியாய்
காத்திருந்தேன் குறைவு கட்டண
அரசுப்பேருந்துக்காக. . . .
வந்தது அரசுப்பேருந்தும் ஆடி  அசைந்து
"சொகுசுப்பேருந்து" என்ற பலகையுடன்
அதிக கட்டணத்தில். . . .

கல்விச்சுமை

கல்வியே  சுமையாய்
கருதப்பட்டது அந்நாளில்
வறுமை மற்றும் அறியாமையால்
அதே கல்வி சுமையாய்
கருதப்படுகிறது இந்நாளில்
புத்தகம் மற்றும் ஏடுகளின் பளுவால்
அந்நாள் இந்நாள் என்றில்லாமல்  என்றுமே
கல்வி சுமை தானோ ! ! !

பிறந்த வீடு


திருமணத்திற்கு பின் விசேச காலத்தில்
பிறந்த வீட்டிற்கு வருவாள் பெண்
கோடைக்கு பின் மழைக்காலத்தில்
தாய்நிலம் தேடி வருகிறது மழை
மழைக்கு நிலம் தான் பிறந்த வீடோ! ! !

Thursday, October 7, 2010

மரங்களை வெட்டுங்கள்


மரங்களை வெட்டுங்கள்
உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்'என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் 'ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை. மண்ணின் வில்லன் அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! ) நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? ,இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.
இதன் கொடூரமான குணங்கள்
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாகமரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.
உடம்பு முழுதும் விஷம்
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.
காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.
அறியாமை
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.
கேரளாவின் விழிப்புணர்வு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.
நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம்,மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .
சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம்,செய்வார்களா?
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட முக்கியம் .
(நண்பன் அனுப்பியது)

Monday, October 4, 2010

திருமணம்

ஒருவரை ஒருவர் விரும்பி
கண்டதும் காதல் கொண்டு
சில பொழுதுகள் இனிமையில்
சில பொழுதுகள் சண்டையில்
சில பொழுதுகள் அழுகையில் நகர்ந்து
பதிவு அலுவலகத்தில் நண்பர்கள் சூழ
நடக்கும் பதிவுத் திருமணத்திலும் சரி

பெற்றோர் உற்றார் உடனிருக்க
பெண் வீட்டிற்கு சென்று
பஜ்ஜி சொஜ்ஜி தின்று
பல லட்சம் செலவு செய்து
வரவேற்பு உணவுக்காக நடக்கும்
உறவினரின் செல்ல சண்டைகளுடன்
நடக்கும் திருமணத்திலும் சரி

புரிதல், விட்டுக் கொடுத்தல், காதல் இல்லையேல்
இரு மனங்கள் இணைவதாக சொல்லும்
எந்த திருமணத்திலும் உண்மையான வெற்றி இல்லை
உண்மையான வெற்றி பெற
உறவுகளை சமமாய் மதித்து
ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து
வாழும் வாழ்வில் வெற்றி பெற வேண்டும்